பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா தமிழகம் வந்து சென்றபின்னர் உங்கள் கட்சியின் செயல்திட்டம் என்னமாதிரி உருவாக்கப்பட்டிருக்கிறது?
சிறப்பான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஒவ்வொரு பிரிவினருக்கும் முறையான இலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அனைத்து பிரிவினரும் தங்கள் பணிகளை ஆரம்பித்துவிட்டனர். உறுப்பினர் சேர்க்கையும் நடந்துகொண்டிருக்கிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதும் அக்கட்சியுடன் செய்துகொண்ட நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியில் ஒரு அம்சம் என்று பாஜக அதைச் செய்யவில்லை என்றும் சொல்லப்படுகிறதே?
அப்படியா? எனக்குத் தெரிந்தவரை அப்படி எந்த ஒப்பந்தமும் இல்லை. அப்படி வேறு யாராவது கூறியிருந்தாலும் எனக்குத் தெரியாது. முதல்வர் வேட்பாளரைப் பொறுத்தவரை எங்கள் தேசியத் தலைவர் தெளிவாக ஏற்கெனவே பதில் கூறிவிட்டார்.
காமராஜர் ஆட்சி என்கிற கோஷம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினரால் வைக்கப்படும். பாஜக அதை எப்படிப் பார்க்கிறது?
நிச்சயமாக காமராஜர் ஆட்சி என்பது மிகவும் வரவேற்கத் தகுந்த ஒன்றுதான். கல்வித்துறையிலும் ஊழலற்ற ஆட்சி என்கிற துறையிலும் அவர் மிகவும் எடுத்துக்காட்டாக விளங்கியவர். வளர்ச்சியை நோக்கிய ஊழலற்ற ஆட்சி என்ற முறையில் மோடியின் ஆட்சி என்பதே காமராஜர் ஆட்சிதான். இன்று காமராஜர் இருந்திருந்தால் மோடியை ஆதரித்திருப்பார்.
கங்கை அமரன், நெப்போலியன் போன்றவர்களைத் தொடர்ந்து பாஜகவுக்கு வர இருப்பவர்களின் வரிசை நீளுமா? யார் வந்தாலும் சேர்த்துக்கொள்வீர்களா?
நிறையபேர் வருவார்கள் என்றுதான் எதிர்பார்க்கிறோம். பாஜக தீண்டத் தகாத கட்சி என்று திராவிடக் கட்சிகளால் உருவாக்கப்பட்டிருந்த பிம்பம் என்றைக்கு திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்ததோ அன்றே உடைந்துவிட்டது. வளர்ச்சியை நோக்கிய மற்றங்களை நோக்கிய மோடியின் நடைமுறைகள் மக்களைக் கவர்ந்துள்ளன. அதுதான் நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் எங்கள் வாக்குவங்கி அதிகரித்ததற்குக் காரணம். திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இன்று தமிழகம் சிறப்பாக இல்லை. போதையின் பிடி, தொழில்வளர்ச்சி குறைவு, மின்சாரத் தட்டுப்பாடு போன்ற சிக்கல்களில் மாநிலம் தவிக்கிறது. எனவே மாற்றத்தை விரும்புபவர்கள் எங்கள் பக்கம் அணிவகுப்பார்கள்.
ஜனவரி, 2015.